மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றோம் – பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை

பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமமான நாம் மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களின் அழுகுரல்களைச் செவிமடுக்கின்றோம். மன்னாரில் அமைதியான விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 2025 செப்டம்பர் 26ஆம் திகதி இரவு நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுடன் இந்த அரசாங்கத்தின் இருண்ட நாட்களில் ஒன்று கடந்துவிட்டிருக்கின்றது. இதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படி நேரிட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தின் மக்கள் பல ஆண்டுகளாக தமது பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பை அழித்துவிடும்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மண் அகழ்வு மற்றும் காற்றாலை செயற்திட்டம் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு எழுச்சியூட்டும் போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர். காற்றாலை விசையாழிகள் ஆயிரக்கணக்கான பறவைகளின் உலகப் பிரசித்திபெற்ற இடப்பெயர்வுப் பாதைகளை பாதித்துள்ள அதேவேளை மண் அகழ்வானது கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை அழித்து வருகிறது. மன்னார் மக்கள் இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான சீர்குலைவினை உணர்கின்றனர்.
அரசாங்கமானது முன்னைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை ஒரு சில ஒப்பனை செய்யப்பட்ட மாற்றங்களுடன் தொடர்ந்து செயல்படுத்துவதாகத் தெரிகின்றது. இந்திய முதலீட்டாளரான அதானி நிறுவனம் மன்னாரில் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதைத் தடுத்து நிறுத்தியதன் பின்னர், அந்த ஒப்பந்தமானது இலங்கை நிறுவனமான ஹேலிஸ் ஃபென்டனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், மன்னார் மக்களுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருப்பதில் இந்த உள்ளூர் நிறுவனமானது இந்திய நிறுவனத்திலிருந்து வேறுபட்ட எந்த விடயத்தையும் மேற்கொள்ளும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.
இதேவண்ணமாக, மன்னார் காற்றாலை மின் திட்டமானது 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) அதன் ‘மின்சார கட்டண முறைமையை’ அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் செயற்பாட்டுடன் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்படும் ஒன்றாக அமைந்திருக்கின்றது. இது IMFஇன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு முன்தேவை நிபந்தனையாகக் காணப்படுகின்றது. ‘செலவு மீட்பு மற்றும் செலவு பிரதிபலிப்பு’ ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவும், பரந்தளவிலான மற்றும் தனியார்மயமாக்கப்பட்ட எரிசக்தித் துறையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அவசரத்தை உறுதி செய்வதற்காகவும் இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக இலங்கை மின்சாரச் சட்டத்தை மிகவும் அவசரமாக நகர்த்துதல், இலங்கை மின்சார சபையின் சேவைகளைப் பிரித்து புதிய நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் மின்சார விநியோகத்தை முழுமையான தனியார்மயமாக்குதலை நோக்கி நகர்த்திச் செல்லுதல், தற்போது மன்னார் மின் காற்றாலை செயற்திட்டம் குறித்த அக்கறைகளை எழுப்பும் மக்களை வன்முறையின் மூலமாக அகற்றியமை ஆகிய விடயங்கள் நவம்பர் மாதக் காலக்கெடுவுடன் ஒத்துப்போகின்றனவாக அமைகின்றன.
மறுபுறம், மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மக்களுக்கு நினைப்பூட்டுகின்றது. 2022 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்புகளைக் கருத்தில் கொள்ளும் வேளையில், இந்த மின் கட்டணக் குறைப்பானது குறிப்பிடத்தக்க அளவிலான நிவாரணமாக அமையவில்லை. இங்கு யதார்த்தமான விடயம் என்னவெனில், தற்போது மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவது என்பது சாதாரண இலங்கையர்களை இடைவிடாத தொடர்ச்சியான கடன் சுழற்சியில் தள்ளிவிடுகின்ற மற்றுமொரு சுமையாக மாறியுள்ளது. மின்சாரக் கட்டணங்களை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும் முறைமைகள் குடும்பங்கள் பல மாதங்களுக்கு மின்சாரம் இல்லாமல் தத்தளிக்கும் நிலையை ஏற்படுத்துவதற்குக் காரணமாகி விடுகின்றன.
மன்னாரில் போராட்டம் நடத்தும் மக்கள் மாற்றத்திற்கான நம்பிக்கையை நிச்சயமாகக் கொண்டிருந்தனர். மாறாக, IMF இடும் தாளத்திற்கு தொடர்ந்து நடனமாடுகின்ற கதையாக, மன்னாரில் ஒரு காற்றாலை மின் நிலையத்தின் உருவாக்கத்தினால் ஏற்படுத்தப்படப்போகும் மீளமுடியாத சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கத்தினை உணர முடியாதளவு குருட்டுத்தன்மை, மற்றும் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி முன்னெடுப்பதில் முற்றிலும் தவறியமை, இந்த விஷயத்தில் அழுகுரல்கள் எழுப்பப்படுகின்றமை ஆகிய விடயங்கள் எந்தவித முறைமை மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே குறிக்கின்றது. மன்னார் மக்கள் தற்போது காணப்படும் காற்றாலை விசையாழிகளுடனான வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், அவர்கள் ஏற்கனவே அனுபவித்த சேதங்கள் தொடர்பிலான அனுபவங்களைக் கொண்டும் பேசுகிறார்கள். பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பு அழிக்கப்படுதல், இந்த சூழலியலுடன் பிணைக்கப்பட்டுள்ள மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை அழிவுக்குட்படுத்தப்படுதல் ஆகிய விடயங்கள் மீளப்பெற முடியாதவை என்பதால் மன்னாரில் காணப்படும் நிலைமை மிகவும் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு பயங்கரமானதாகக் காணப்படுகின்றது.
எதிர்ப்புப் போராட்டத்தின் மீதான தாக்குதலும்கூட இலங்கைத் தீவின் வடக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயற்பாடே ஆகும். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டிருந்த வரலாற்றுடன், சிங்கள பெரும்பான்மைவாதத்தினை நோக்கியதான தொடர்ச்சியான அனுபவத்தின் பின்னணியில் இந்தத் தாக்குதல் நடந்தேறியிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அதன் கட்சிக்குள்ளும், அதற்கு அப்பாலும் தொடர்ச்சியாகக் கட்டுப்படுத்தி, ஆணையிடும் ஒரு சிங்கள பெரும்பான்மைவாத போக்காகும். போர், வன்முறை மற்றும் இலங்கை அரசின் மேலிருந்து கீழாக திணிக்கப்பட்ட ‘அபிவிருத்திச் செயற்திட்டங்கள்’ காரணமாக பல தலைமுறைகளாக கடுமையான விதத்தில் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் நியாயப்படி இதனை ஒரு சிங்கள அரசின் மற்றொரு அடக்குமுறைச் செயற்பாடாகவே கருதுவார்கள். பெரும்பான்மைவாத மனநிலை முரண்பாட்டைத் தூண்டிவிட்டு வன்முறையை நியாயப்படுத்தியுள்ளது. எரிசக்தித் துறை போன்ற சந்தைகளைக் கைப்பற்றுவதில் ஆர்வமுடன் செயற்படும் நிறுவனங்களுக்கும் இது மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு வன்முறையாகவே காணப்படுகின்றது.
சுற்றுச்சூழல் அல்லது மனித உரிமைகள் குறித்த உண்மையான அக்கறை இன்றி ‘பசுமை எரிசக்தியை’ கொண்டு வர முனையும் விடயமானது, உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்களும், நிறுவனங்களும் ஈடுபட்டுள்ள ஒரு பசுமை சலவை நடைமுறையாகக் காணப்படுகின்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்துதல் என்ற போர்வையில் தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு வழி வகுக்கும் வகையில் பொது எரிசக்தித் துறை மற்றும் அதனூடாக வழங்கப்பட்ட மானியங்களை அகற்றுவது உலகம் முழுவதும் நாம் காணும் மற்றொரு போக்காகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமமும் இந்த வரிசையில் இணைந்துகொள்வதை காணக்கிடைப்பது ஒரு கவலையளிக்கும் விடயமாகும். இலங்கை அதன் பொது எரிசக்தித் துறை மூலம் 99% மின்மயமாக்கலை அடைந்த நாடாக அறியப்படுவதால், இந்த நடவடிக்கை மிகவும் சோகமானது.
எரிசக்தியை ஒரு அடிப்படை உரிமையாகக் கொண்ட ஒரு ஆலோசனை வழங்கும் செயன்முறை மூலம் எரிசக்தி உட்கட்டமைப்பு, செலவினங்கள் மற்றும் உட்பாய்ச்சல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஒரு மீளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியான அழிவை ஏற்படுத்தாமல், எரிசக்தித் துறையிலிருந்து செலவு மற்றும் வருமானத்தை சமநிலைப்படுத்தும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சாத்தியமாக அமையும். குறிப்பாக தனியார்மயமாக்கல் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முனையும் தற்போதைய முறையானது நீண்ட காலத்திற்கு நீடிக்கப்பட முடியாததாக அமையும் அதேவேளை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் செலவுகளை அதிகரிக்கச் செய்வதாக அமையும்.
இன்றைய வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவையாக அமைந்திருப்பதால், எரிசக்திக்கான உரிமையை மக்கள் பெற வேண்டும். இந்த உரிமையானது பாதுகாப்பான சூழலுக்கான உரிமையுடன் ஒருங்கிணைந்ததாக காணப்படுவது அவசியமாகும். மாறாக, ஒரு விடயத்திற்கு எதிராக மற்றொன்றை நிறுத்துவது என்பது தற்போது உலகில் மிகவும் பொதுவானதாகிவிட்ட ஒரு இழிவான செயற்பாட்டு முறையாகும். மக்கள் போராட்டத்தின் சக்தியின் மூலம் ஆட்சிக்கு வந்த ‘முற்போக்கான அரசாங்கம்’ என்று கூறப்படும் ஒரு அரசாங்கமானது, இந்த இழிவான செயற்பாட்டுப் போக்குடன் இணைந்து கொள்வதைக் காண்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் என்பது பெண்ணிலைவாத பொருளியலாளர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என நாடு முழுவதுமிருந்து இலங்கையின் தற்போதைய பொருளதார நெருக்கடியுடன் அவர்கள் பணியாற்றும் சமுதாயங்களின் வாழ்க்கை யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைப் பரிந்துரைகளைப் புரிந்துகொள்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றுக்குக் குரல் கொடுப்பதற்கும் 2022 ஏப்ரலில் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டாகும்.
உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும் feministcollectiveforjustice@gmail.com
குறிப்புகள்
1. R. Fernando (Sept 2025) ‘Brutality, Broken Trust and the Battle for Dignity in Mannar’ Groundsview https://groundviews.org/2025/09/27/brutality-broken-trust-and-the-battle-for-dignity-in-mannar/ ; (Sept 2025) ‘Mannar residents vow to continue protests against wind power project’ Sunday Times https://sundaytimes.lk/online/news-online/Mannar-residents-vow-to-continue-protest-against-Wind-power-project/2-1150339
2 D. Alagiyawanna (Aug 2025) ‘A Sri Lankan sanctuary faces the perils of misguided renewable expansion’ Daily Mirror https://www.dailymirror.lk/opinion/A-Sri-Lankan-Sanctuary-Faces-the-Perils-of-Misguided-Renewable-Expansion/
3 Buwanake S. Perera (April 2023) ‘Wind Farms: The Death of Mannar’ Groundviews https://groundviews.org/2023/04/25/wind-farms-the-death-of-mannar/
4 (Jan, 2025) ‘Sri Lanka’s Hayeleys-Fentons to get Mannar wind plant at 4.56 cents’ Economy Next https://economynext.com/sri-lankas-hayleys-fentons-to-get-mannar-wind-plant-at-4-65-cents/
5 Hiran Daluwatta (July 2025) Sri Lanka’s Electricity Amendment bill: Trojan Horse for national economic collapse’ Daily FT https://www.ft.lk/columns/Sri-Lanka-s-Electricity-Amendment-Bill-2025-Trojan-Horse-for-national-economic-collapse/4-778823
6 The Examiner (Sept 2025) ‘Power struggle over messy CEB reforms’ The Examiner https://www.examiner.media/power-struggle-over-messy-ceb-reforms/?ref=the-examiner-newsletter
7 Minaza Hassan (Sept, 20205) ‘Residents fear more damage from Mannar turbines expansion’ Sunday Times.https://www.sundaytimes.lk/250914/news/residents-fear-more-damage-from-mannar-turbines-expansion
8 Shabeer Mohammed. (Aug, 2025) ‘Mannar’s fight against unplanned development’ Sunday Observer https://www.sundayobserver.lk/2025/08/24/news-features/60072/mannars-fight-against-unplanned-devepment/
