இன்னும் ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் அரசு தனது மக்களை அச்சுறுத்துவது ஏன்?

பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம்

“பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டம்” (PSTA) என்ற தலைப்பிடப்பட்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திட்டத்தின் மீது பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் (FCEJ) மிகவும் கோபமடைந்துள்ளது. இந்த சட்ட வரைவானது, தற்போது காணப்படும் 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அடக்குமுறையான விதிகளையும் அசாதாரண அதிகாரங்களைக் கொண்ட மற்றுமொரு சட்டத்தால் மாற்றீடு செய்ய முயற்சிக்கின்றது. PSTA என்னும் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்குக் காரணம், அடக்குமுறைச் சட்டங்கள், அசாதாரண நிறைவேற்று அதிகாரத்தை இயல்பானதாக்குதல், மற்றும் தொடர்ச்சியான இராணுவமயமாக்கல் ஆகிய விடயங்களுக்கு எதிராக நாம் செயற்பட்டுவருவதே ஆகும். பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஆட்சியை மேற்கொள்வது எமது சமூகங்களை அழிக்கின்றது. இது சமத்துவமின்மை, விளிம்புநிலைக்குத் தள்ளப்படல் மற்றும் ஊழல் ஆகிய விடயங்களைத் தூண்டுவதாக அமைகின்றது. 

PSTA வரைவானது PTA ஐ விட மோசமானது என்பதே எமது பகுப்பாய்வு. இன்றைய சூழலில் இவ்வரைவின் அவசியத்தை அது நியாயப்படுத்தவில்லை. பயங்கரவாதச் செயல்களுக்கான பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணங்களை வழங்கியுள்ள நிலை PSTA இலும் தொடர்கின்றது. இது ‘ஊக்குவித்தல்”, ‘வெளியீடு” மற்றும் ‘பயிற்சி” ஆகியவற்றை அச்சுறுத்தும் நடவடிக்கைகளாக காண்பதற்காக ஆபத்தான விதத்தில் வரைவிலக்கணங்களை விரிவு படுத்துகிறது. இது போலீசாருக்கு கைது செய்வதற்கான பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கி இராணுவத்தினர் மற்றும் கடலோரக் காவல்படையினருக்கு கைது செய்யும் அதிகாரங்களை அறிமுகப்படுத்துவதுடன் நிர்வாக ரீதியான தடுப்புக் காவலை தொடர்ந்தும் அங்கீகரிக்கின்றதாக அமைகின்றது. ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், காலவரையின்றிய காலப்பகுதிக்கு நிறுவன அமைப்புகளைத் தடை செய்வதற்கும் ஜனாதிபதிக்கு நியாயபூர்வமற்ற அதிகாரத்தை வழங்குதல்; பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தடைசெய்யப்பட்ட இடங்களை பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குதல்; மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் உள்ள பொலீஸ் அதிகாரிகளுக்கு நாட்டுப் பிரசைகளின் நடமாட்டத்தைப் பாதிக்கும் விதத்திலான தடை உத்தரவுகளைப் அமுல்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குதல் ஆகியன மிகவும் ஏமாற்றத்தை அளிக்கும் விடயங்களாக உள்ளன. சட்டத் தாமதங்களின் பின்னணியை நன்கு அறிந்த நிலையில் இந்த வரைவானது, ஒரு சந்தேக நபர் பொது மன்னிப்பு, இழப்பீடு செலுத்துதல், சமுதாய சேவை மற்றும் புனர்வாழ்வு போன்ற தண்டனை வகைகளை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டால், வழக்குத் தொடரலை 20 ஆண்டுகள் வரை கொண்டு செல்வதற்கான அதிகாரத்தை சட்டமா அதிபருக்கு வழங்கும் சட்டத் திரிபுகளையும் அறிமுகப்படுத்துகிறது. அசாதாரண அதிகாரத்தை இயல்பாக்கும் இன்னுமொரு சட்டம் இலங்கைக்கு தேவையில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் மூலமாக, இராணுவமயமாக்கல், வளர்ந்து வரும் பாதுகாப்புச் சட்டதிட்டங்களின் உதவியுடனான கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றினால் சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள பேரழிவினை இந்த நாட்டுக்கு நினைப்வூட்டுகிறோம். யுத்தத்திற்குப் பிந்தைய மீளமைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான இடம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்  அதேவேளை குறைந்த வருமானம் கொண்ட உழைக்கும் மக்கள் உடல், உணர்வு மற்றும் நிதிசார் பாதுகாப்பை விரும்புவதற்கான சந்தர்ப்பமும்கூட மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. PSTA போன்ற அடக்குமுறைச் சட்டத்தையும் முன்மொழிவதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தலானது மனித பாதுகாப்பு குறித்த பெண்ணியக் கருத்தாக்கங்களுக்கு அகௌரவத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். பாதுகாப்பு என்னும் விடயமானது அர்த்தமுடைய ஒன்றாக இருக்க வேண்டுமானால், அது தனிநபர் மற்றும் சமுதாய மட்டத்தில் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.

இலங்கையில் மனித பாதுகாப்புத் தேவைகள் சார்ந்த அவசர நிலை மறுக்க இயலாதவொன்று – நாட்டில் 50% க்கும் அதிகமான குடும்பங்கள் கடன்பட்ட நிலையில் காணப்படுகின்றன, சனத்தொகையில் கால்வாசி பகுதியினர் வறுமையில் வாழ்கின்றனர், 30% க்கும் அதிகமான குடும்பங்கள் நடுத்தரமான / கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை சார்ந்த பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றன, ஒவ்வொரு ஆண்டும் போலீசாருக்கு 100,000 க்கும் அதிகமான வீட்டு வன்முறை சார்ந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆழமடையும் சமத்துவமின்மை, வளர்ந்து வரும் வறுமை, நாட்டின் கல்வி மற்றும் சுகாதார கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், கடுமையான சிக்கன நடவடிக்கைகள் என்கின்ற பொறியினுள் அகப்பட வைத்து நெருக்குதல், நல்லிணக்கம், மீளமைப்பு, யுத்தத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு ஆகியவற்றில் தன்னம்பிக்கையும், நம்பிக்கையையும் அனுபவிக்க முடியாத தொடர்ச்சியான சூழ்நிலை என்பனவற்றுடன் பால்நிலை, இனம், வர்க்கம், மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான கட்டமைப்பு ரீதியான பாரபட்சத்தை இனங்கண்டு அதற்கேற்றாற்போல் பதிலளிக்கத் தவறுதல் ஆகியவற்றை அனுபவித்து வருகிறோம். மக்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இல்லாதவிடத்தும், அச்சுறுத்தல், வன்முறை மற்றும் பாரபட்சமின்றி தமது வாழ்க்கையை விருத்தி செய்வதற்கான பாதைகளை நம்பாதவிடத்து நாட்டில் பாதுகாப்பை உருவாக்கவோ, அதனைப் பற்றி கலந்துரையாடவோ முடியாது. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நிவர்த்தி செய்தல், அடக்குமுறைச் சட்டங்களைத் மீளப் பெறுதல், பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை மற்றும் ஏனைய வகையான வன்முறைகளை இனங்கண்டு நிவர்த்தி செய்தல், குடும்பத்தின் கடன் நிலைமையுடன் தொடர்புபட்ட வன்முறை, குடும்பத்தில் சமத்துவம், அனைத்து மட்டங்களிலும் பிரதிநிதித்துவம் மற்றும் மலையக மக்கள் மீதான தொடரும் பாரபட்சம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சட்டதிட்டம் சார்ந்த அல்லது கொள்கை ரீதியான முன்னெடுப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த சட்ட வரைவானது வரலாற்றிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையே காட்டுகின்றது. இந்த அரசாங்கமானது அரச அடக்குமுறை கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கும், இராணுவமயமாக்கலை தொடர்ந்து செயற்படுத்தவுமே விரும்புகிறது என்பதையே இது நமக்குக் கூறுகிறது. கட்டமைப்பு மாற்றத்திற்காக மக்களின் கணிசமான வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த ஒரு புதிய அரசாங்கத்தின் மேல் ஒரு வருடத்திற்குள் நம்பிக்கையை இழப்பது கடினமான ஒரு விடயமாகும். எனினும், நாம் அந்நிலையில் தான் இருக்கின்றோம். இந்த நாட்டில் பெண்கள், இளைஞர்கள், பிள்ளைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை சார்ந்த பிரசைகளுக்கு ஒவ்வொரு நாளைக் கடத்துவதும் ஒரு போராட்டமான ஒன்றாகக் காணப்படுகின்ற அதேவேளை அனுதினமும் அச்சுறுத்தல்கள் மற்றும் பாகுபாடுகள் எப்போது வெடிக்கும் என்று தெரியாத நிலை காணப்படுகின்றது. PSTA என்னும் வடிவத்தில் நமக்கு மற்றுமொரு அச்சுறுத்தல் அவசியமில்லை. PSTA ஐ இப்போதே மீளப் பெறு!

19.02.2026

​பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் என்பது நாட்டின் பல்பாகங்களிலிருந்தும் பெண்ணிலைவாத பொருளியலாளர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய இலங்கையின் தற்போதைய பொருளதார நெருக்கடியுடன் அவர்கள் பணியாற்றும் சமுதாயங்களின் வாழ்க்கை யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைப் பரிந்துரைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றுக்குக் குரல் கொடுப்பதற்கும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டாகும்.  உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவு​ feministcollectiveforjustice@gmail.com

Leave a comment